சிறுகதை
வரன்களின் முரண்கள்
அலைபேசியை தலைமாட்டிற்கு அருகிலேயே வைத்தவாறு தன் வாழ்வின் மிக முக்கியமான அழைப்புக்காக காத்திருந்தாள் வசந்தா. கடந்த அரைமணி நேரமாக அவளுக்கு வந்த அனைத்து அழைப்புகளையும் அறவே தவிர்த்துவிட்டு தான் ஆவலோடு விரும்பும் அழைப்பை ஆசையோடு எதிர்பார்த்திருந்தாள். தான் சமீபமாய் ரவி என்பவரை காதலித்து வருவதையும் அவரை தனது மாமா முத்துவின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் முத்துவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வசந்தா அலைபேசியிருந்தாள்.அவரோ 'நான் வெளியில் இருக்கிறேன், வீட்டுக்கு போய் அழைக்கிறேன்' என்று கூறி வைத்துவிட்டார். தனது மாமாவின் அழைப்புக்காகத்தான் என்ன சொல்லப் போறாரோ என்ற பதட்டம் கலந்த ஆர்வத்தோடு படுத்திருந்தாள் வசந்தா.
வசந்தாவுக்கு மூன்று வயது இருக்கும் போதே அவளுடைய அப்பா இறந்து விட்டதால் வசந்தாவும் அவளது அக்காக்கள் இருவரும் அண்ணனும் பக்கத்து ஊரில் உள்ள தாய்மாமனான முத்து வீட்டில்தான் படித்து முடிக்கிற காலம் வரை இருந்தார்கள்.மாமாவின் மேல் வசந்தாவிற்கு கொள்ளை பாசம்.அவருக்கும் வசந்தா மேல்தான் மற்றவர்களைவிட கூடுதல் அன்பு.வசந்தாவின் அக்காக்களையும் அண்ணனையும் டிகிரி படிப்போடு நிறுத்தியவர் அவளை மட்டும் தான் டீச்சர் ட்ரெயினிங்.. டிகிரி மற்றும் பி.எட் படிப்பு வரை படிக்க வைத்திருந்தார்.இதன் காரணமாக வசந்தா எதை செய்தாலும் தனது மாமாவை கேட்காமல் செய்ய மாட்டாள்.அதன்படிதான் தனது திருமண ஆசையையும் முத்துவிடம் கூறியிருந்தாள்.
அலைபேசி அடித்த அடுத்த நொடியே எடுத்து காதில் வைத்தவள் மறுமுனையில் இருந்த மாமாவின் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.
'பையன் யாரு..எந்த ஊரு..
பேரு ரவி..ஊரு..மாங்குடி
மாஙகுடியா..
'ஊரு ரொம்ப தூரமாருக்கே...இழுத்தார் முத்து.
ரொம்ப நல்ல பையன் மாமா' வசந்தா உரையாடலை தொடர விரும்பினாள் .அதப்பத்தி ஒன்னும் இல்லம்மா..நம்ம ஊர்லருந்து இவ்ளோ தொலவுக்கு யாரும் சம்பந்தம் போட்டதில்ல.. அதான் யோசிக்கிறேன்.. முத்து மறுபடியும் இழுத்தார். 'அவுங்களுக்கு எந்த கெட்டபழக்கமும் இல்ல மாமா'..வசந்தா தொடர்ந்தாள்'. இல்லம்மா இங்குனயே எங்காவது பக்கத்துல நம்ம சனங்கட்டுள்ளயே இருந்தா தேவலாம்னு தோணுது என முத்து தனது ஆழ்மன ஆசையை பட்டும் படாமல் சொன்னார்.' இல்ல மாமா அவங்களும் நம்ம சனக்கட்டுல தான் வருவாங்க விசாரிச்சுட்டேன்' வசந்தாவின் ஆர்வம் வார்த்தைகளில் தெறித்தது. அடுத்து வசந்தா ஏதோ சொல்ல வர காதில் வாங்க விரும்பாதவராய்..' எதுவா இருந்தாலும்.. அண்ணே கல்யாணம் முடிஞ்சு பேசிக்கலாம்..' அலைபேசி தொடர்பை அவசரமாய் துண்டித்தார்.
மாமாவுக்கு தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் பெரிதாய் ஆசையில்லை என்பதை புரிந்து கொண்ட வசந்தா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.' தனது அக்காங்க ரெண்டு பேருக்குமே மாமாதான் மாப்பிள்ளை பார்த்து பக்கத்து ஊரிலேயே கட்டிக் கொடுத்தார்.. அவங்ககிட்ட மாட்டிக்கிட்டு அக்காங்க படுற பாட்டதான் நெதமும் பாக்குறமே..ஏன் மாமா புரிஞ்சுக்கவே மாட்றாரு' வசந்தா தனது மனதோடு உரையாடிக் கொண்டிருந்தாள். தனது அக்காக்களின் வாழ்வு சந்தோசமாய் இல்லை என்பதை உணர்ந்தே வசந்தா தனது திருமண வாழ்வானது தன்னுடைய விருப்பப்படிதான் நடக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தாள். ஆனால் தனது ஆசைக்கு முத்துவின் சம்மதம் நிச்சயம் வேண்டுமென்பது வசந்தாவின் விருப்பமாகவும் இருந்தது.
அடுத்த நாள் பக்கத்து நகரத்தில் வசந்தாவின் அம்மாவையும் அண்ணனையும் எதேச்சையாக சந்தித்த முத்து கடுங்கோபத்துடன்..'என்ன நினைச்சுகிட்டு பேசுறா இந்த வசந்தா புள்ள.. படிச்ச திமிரும் வேலைக்கு போறோம்ங்கிற தைரியமும் அவள அவ்ளோ பேசச் சொல்லுதோ.. அதோட இஷ்டத்துக்கு பண்றதுக்கு தான் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்குனமா.. ஒழுங்கு மரியாதையா இருக்கச் சொல்லுங்க' பொரிந்து தள்ளினார்.'கோபப்படாதப்பா தம்பி நம்ம புள்ள தானே அவ.. நம்மள மீறி என்ன பண்ணப்போறா.. எல்லாஞ் சரியாகிடும்' வசந்தாவின் அம்மா ஆற்றுப்படுத்தி பேசிச் சென்றார்.
வசந்தா தனது விருப்பத்தை அம்மாவிடமும் அண்ணனிடமும் தான் முதலில் சொன்னாள். அவர்கள் ஒரே வார்த்தையாக சொல்லிவிட்டார்கள்.'எங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்ல.. மாமாகிட்டச் சொல்லி சம்மதம் வாங்குறது உன்னோட பொறுப்பு.. ஆனா உனக்காக நாங்க ஏதும் மாமா கிட்ட பேச முடியாதுனு'.வீடு திரும்பிய வசந்தாவின் அம்மாவும் அண்ணனும் வந்ததும் வராததுமாக வசந்தாவிடம் நகரத்தில் நடந்ததை சொல்லி கவலைப்பட்டார்கள்.என்ன செஞ்சாலும் மாமா மனசு வருத்தப்படுறமாறி செஞ்சிடாத..வசந்தாவின் அம்மா அழுது சொன்னார். வசந்தாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. அவளது அலைபேசி அடித்தது. பெரிய அக்கா பேசினாள், வசந்தா நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னாள்.'கவலைப்படாத வசந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும். நீயாவது உன்னோட விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்ககோடீ.. நாங்க தான் கெடந்து கஷ்டப்படுறோம்..சற்று ஆறுதலாய் பேசினாள். வசந்தாவுக்கு தனது அம்மா அண்ணன் அக்காவின் ஆதரவுகள் ஒருபக்கம் ஆறுதல் தந்தாலும் முத்து மாமாவின் நடவடிக்கைகள் பயத்தையே கொடுத்தது. ஒருவேளை தன்னுடைய தந்தை இருந்திருந்தால் இந்த அளவுக்கு கஷ்டப்பட விட்டுருக்க மாட்டாரோ என்றுகூட அவளுக்கு நினைக்க தோன்றியது. இதே வசந்தாதான் பல தருணங்களில் 'நம் அப்பா இருந்தாகூட முத்து மாமா மாதிரி நமக்கு செஞ்சிருக்க மாட்டாருல்ல' என்றும் நினைத்திருக்கிறாள்.
வசந்தா விரும்புவதாக சொல்லும் ரவி டெல்லியில் சொந்தமாக பாத்திரக்கடை வைத்திருக்கிறான். அந்த கடைக்கு பக்கத்தில் உள்ள கடிகாரக் கடையில் வசந்தா ஊரைச் சார்ந்த பையன்கள் வேலை பார்க்கிறார்கள். அந்த பையன்கள் மூலமாகத்தான் ரவி அவளுக்கு அறிமுகம். அவ்வப்போது நல விசாரிப்பாக தொடங்கிய அலைபேசி உரையாடல் நாளடைவில் விருப்பமாக மாறியது. தனது திருமண விருப்பத்தை வசந்தா கூறியதும் 'நீ உங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கிட்டு சொல்லு.. வேணும்னா நானுங்கூட உங்க வீட்ல பேசுறேன்' என்றான் ரவி.. உங்க வீட்டுல உள்ளவங்களோட சம்மதம் ரொம்ப முக்கியம்னு பேசியது அவன் மீது கூடுதல் மரியாதையை வசந்தாவுக்கு ஏற்படுத்தியிருந்தது.
ஒருநாள் வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் வசந்தா தனது மாமாவின் நெருங்கிய நண்பரான கண்ணனை எதேச்சையாக சந்தித்தாள். அவரிடம் சொன்னால் ஏதாவது நல்லது நடக்குமா .. என்ற ஆவலோடு விசயத்தை சொன்னாள். கண்ணனும் பேசிப் பார்க்கிறேன் என்று உறுதி கூறி விடை பெற்றார். கிளம்பும்போதுகூட 'நீங்க சொன்னா கண்டிப்பா மாமா கேட்பாரு..ண்ணா ' என்றாள் நம்பிக்கையுடன்.
அடுத்த நாள் காலையிலேயே முத்துவை சந்தித்த கண்ணன் 'என்னடா மாப்ள..ஒன்னுமே சொல்லிக்கல நேத்து வர்ற வழியில வசந்தாவ பாத்தேன். அது விஷயமாத்தான் பேசலாம்னு வந்தேன். நீ என்ன சொல்ற' என்ற கண்ணனிடம் 'ஓங்கிட்ட சொல்றதுல என்ன மாப்ள இருக்கு.. இந்த புள்ளயோட இஷ்டத்துக்கு எல்லாமும் பண்ண நெனச்சா நாம எதுக்கு இருக்கோம். நாம சொல்றத கேட்கும்னுதானே அதுகளுக்கு வேண்டியதெல்லாம் செய்றோம்.. ஆனா இந்த வசந்தா நாயி எங்கிட்டயே வந்து தைரியமா சொல்லுது.. நா ஒருத்தன விரும்புவேன்.. கட்டிவையினு.. எல்லாம் நெறய படிச்சிட்டோம்..வேலைக்கு போறோம்..சம்பாதிக்கிறோம்கிற திமிரு.. ஆனா நா உயிரோட இருக்குற வரைக்கும் அது நடக்காது மாப்ள கண்ணனிடம் தசைகள் ஆட காட்டுத்தனமாக கத்தினார் முத்து. உணர்ச்சி வசப்படாதே மாப்ள. அந்தப் புள்ள ஒன்னும் அது இஷ்டத்துக்கு பண்ணிட்டுப்போக நெனக்கலியே. உன்னோட சம்மதம் முக்கியம்னு தானே நிக்கிது. அத நெனச்சுப்பாரு மாப்ள. மூத்த புள்ளங்க ரெண்டுக்கும் நீதான் பாத்து பண்ணி வச்சே. இப்போ அதுக ரெண்டும் நம்ம கண்ணு முன்னாலேயே கஷ்டப்பட லையா.. நம்ம புள்ள நல்லா இருக்கட்டும்னு நெனச்சு பண்ணி வையி மாப்ள என்றகண்ணனிடம் நீ என்ன சொன்னாலும் எம்மனசு ஏத்துகிடல மாப்ள..அது எப்டி மாப்ள ஒரு பொம்பள புள்ளக்கி இவ்ளோ தைரியம்.அப்போ நாம குடும்பத்துல ஆம்பளனு எதுக்கு இருக்கோம். நாம சொல்றத கேட்காத புள்ள நமக்கெதுக்குங்குறேன்' நெஞ்சு படபடத்தார் முத்து.ஏன்டா மாப்ள இப்பிடிலாம் பேசுற உன்னோட நெலம எனக்கும் புரியுது..கொஞ்சம் வசந்தாவோட நெலமயயும் யோசிச்சுப்பாரு..அப்பறம் உன்னோட விருப்பம்' என்றார் சாந்தமாக கண்ணன்'..சரிடா.. மாப்ள நீயெல்லாம் சொல்ற ..கழுத எக்கேடோ கெட்டுப்போகுதுனு பண்ணி வைப்போம்.ஆனா மாப்ள எனக்கு இதுல துளிகூட விருப்பமில்ல..அந்த புள்ள கிட்ட சொல்லிரு இனிமே என்னோட மூஞ்சியிலயே முழிக்கக் கூடாதுன்னு. நாள பின்னைக்கு எந்தவொரு பிரச்சினைக்கும் எங்கிட்ட வந்து நிக்க கூடாதுனு'சாபம் விடாத குறையாக பொருமினார் முத்து.'நீயே போன் பண்ணி வசந்தாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு மாப்ள.. கேட்டா அந்த புள்ள நிம்மதிபடும் என்ற கண்ணனிடம்' மாப்ள அந்த புள்ளகிட்ட பேசியே ஆறு மாசமாச்சு.. நம்ம பேச்ச கேக்காத புள்ளகிட்ட பேச்சி என்ன வேண்டி கெடக்கு பேச்சி. நீயே சொல்லிடு மாப்ள அந்த புள்ளையோட அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த மாசம் கல்யாணத்த வச்சிக்கிடுவோம்னு' அலட்சியமாக கூறினார் முத்து. முத்துவுடைய அலைபேசியிலிருந்து அழைத்து கண்ணன் தான் பேசினார்..'மாமா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாரு பாப்பா.. சந்தோசமா இரும்மா.. ஆனா நல்லா வாழ்ந்து காட்டணும் பாப்பா' என்றார் ஆசை பொங்க. மாமாவின் அலைபேசியிலிருந்து ஆறு மாசத்திற்கு பிறகு அழைப்பு வந்தும் அவர் பேசாததிற்கு வருத்தப்படுவதா..இல்ல மாமா தனது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சியடைவதா.. ஒன்றும் புரியாமல் அழத் தொடங்கினாள் வசந்தா. உடனே அலைபேசியில் தனது மாமாவுக்கு அழைத்தாள். அவர் எடுக்காததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அன்று வீட்டுக்கு வந்திருந்த வசந்தாவின் சின்னக்காதான் 'அழாதே புள்ள.. உன்னோட நல்ல மனசக்கு நீ நல்லா இருப்ப..என தேற்றினாள்.
வசந்தாவின் அண்ணனுடைய திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவளது திருமண ஏற்பாடு குறித்து எதுவும் பேசப்படாதிருக்கவே வசந்தா.. ரவி வீட்டாரிடம் முத்துவுடைய எண் கொடுத்து பேசச் சொன்னாள். ரவி வீட்டார் எத்தனை முறை அழைத்தாலும்..'பாக்கலாம்.. இப்ப என்ன அவசரம்'என்றே தட்டிக்கழித்து வந்தார். ஒரு கட்டத்தில் முத்து, ரவி வீட்டாரின் அலைபேசி அழைப்பை எடுக்கவேயில்லை.அப்படியாவது இந்த சம்மந்தம் நடக்காமல் நின்று போகுமா என்ற எண்ணமும் முத்துவிடம் இருந்தது. இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் வசந்தா கண்ணனின் உதவியைத்தான் நாட வேண்டியிருந்தது. வசந்தா தான் விரும்பி விட்ட ஒரே காரணத்தால் எல்லாரிடமும் அவளே பேச வேண்டியிருந்தது. இதுவே அவளுக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது.தனது குடும்பத்தினர் மீதும் முத்து மாமாவின் மீதும் வசந்தா வைத்திருந்த மலை போன்ற நம்பிக்கை சல்லி சல்லியாக நொறுங்கிப்போனது.
ஒரு வழியாக நல்ல நாளொன்றில் வசந்தாவை பெண் பார்க்க ரவியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். வந்தவர்களை முத்துவுக்கு பயந்து வசந்தா குடும்பத்தினர் யாரும் முறையாய் வரவேற்கவில்லை.வசந்தாவின் நிலையை விளக்கி ரவி ஏற்கனவே தனது குடும்பத்தினருடன் சொல்லியிருந்ததால் அவர்களும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தேனீர் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டு வரதட்சணை குறித்த பேச்சு எழுந்தது. உடனே முத்து, மாப்பிள்ளை வீட்டாரை அவமதிக்கும் எண்ணத்தோடு 'பொண்ணுக்கு நகையெல்லாம் ஒன்னும் போட முடியாது..இப்போ கையில காதுல போட்டுருக்குறத நல்லா பாத்துக்கோங்க.. இதோட தான் அனுப்பி வைப்போம்'என்றார். உடனே ரவியின் அம்மா உங்களோட இந்த நகைக்கூட எங்களுக்கு வேணாம். எங்க மருமக மட்டும் வந்தா போதும்..நாங்க ராணி மாதிரி வச்சுப் பாத்துப்போம்னு சொன்னதும் சபையிலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். முத்துவின் தலை முதன்முதலாக தனது குடும்பத்தினர் முன்பு கவிழ்ந்திருந்தது.
வசந்தாவின் திருமணம் நெருங்கிக் கொண்டிருந்தது. அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதனை எடுத்துப் பார்த்த வசந்தாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. ஏதோ கடமைக்கு சாதாரண தாளில் அச்சிடப்பட்டு இருந்தன அழைப்பிதழ்கள். முன்பு ஒருமுறை வசந்தா கல்யாணத்திற்கு சிறப்பான முறையில் அதிக எண்ணிக்கையில் அழைப்பிதழ் அடித்து தடபுடலாக நடத்த வேண்டுமென்று முத்து சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.அப்படித்தான் திருமண மண்டபமும் இருப்பதிலேயே குறைந்த வாடகைக்கு உள்ளதைப் பிடித்து ஏற்பாடு செய்திருந்தனர்.எப்படியெல்லாம் அவளை மனரீதியாக பாதிக்க வைக்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் முத்து செய்து கொண்டுதான் இருந்தார். அந்தத் தருணங்களிலெல்லாம்'தைரியமா இரு வசந்தா நாம நல்லா வாழ்ந்து காட்டுவோம்'.. என்று ரவியின் வார்த்தைகளே அவளைத் தேற்றின. முத்துவின் முழு விருப்பமுமின்றி இந்த திருமணம் நடப்பதால் வசந்தா வீட்டினர் கூட அவளிடம் சரியாய் பேசுவதில்லை. அவளின் வீடானது கல்யாணம் வீட்டிற்கான எந்தவொரு களையுமின்றி மௌனித்து கிடந்தது.எல்லோரும் தன்மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து வாழ்ந்திருந்த வசந்தாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் பெருத்த மன வேதனையை ஏற்படுத்தியது.வசந்தா மன வேதனை அடைந்த அத்தனை தருணங்களிலும் ரவியும் அவனது குடும்பத்தினரும் தான் ஆறுதலாய் இருந்தார்கள்.
எல்லா சங்கடங்களையும் கடந்து திருமண நாளும் வந்தது.வளர்த்த கடமைக்கு வந்து நின்று மாமனது முறையை ஏனோதானோவென்று செய்து முடித்து சாப்பிடாமல் விருட்டென நடையைக் கட்டினார் முத்து.சாப்பிடக் கூட செய்யாமல் தனது மாமா சென்ற செய்தி கேள்விப்பட்டு மணமேடையில் நின்றிருந்த வசந்தா கண்ணீர் மல்கியது வந்திருந்த அனைவரையும் கலங்கச் செய்தது.
வசந்தா வாழ்க்கைப்பட்டு வந்த இடம் அவள் நினைத்ததை விட சிறப்பாகவே இருந்தது. அவள் மனதை புரிந்து கொண்டு எல்லோரும் நன்றாகவே நடந்து கொண்டனர்.வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் வசந்தாவின் அம்மாவும் அக்காக்களும் வசந்தா வீட்டிற்கு வந்து சென்றனர். அவர்களின் வருகையின் போதெல்லாம் வசந்தா..'மாமா என்ன பத்தியெல்லாம் மாமா விசாரிக்குமா'எனக் கேட்டபடியே இருந்தாள்.அவர்களும் ஏதோவொரு பொய்யைச் சொல்லி சமாளிப்பார்கள்.திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட அத்தனை கசப்பான அனுபவங்களை மறந்து தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை ரசித்து வாழத் தொடங்கியிருந்தாள் வசந்தா. அவளது கணவனும் பக்கத்து நகரத்திலேயே பாத்திரக்கடையை தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வசந்தாவின் அம்மாவும் அக்காக்களும் முத்து வீட்டிற்கு ஒன்றாய் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் வந்த நேரத்தில் முத்து வீட்டில் இல்லை. முத்துவின் மனைவியோடு எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். பல்வேறு விதமாக போய்க்கொண்டிருந்த பேச்சு வசந்தா விசயத்தில் வந்து நின்றது. வசந்தா வாழ்க்கைப்பட்டு போயிருக்கும் குடும்பத்தை பற்றியும் அவளுக்கு வாய்த்திருக்கிற நல்ல வாழ்க்கைப் பற்றியும் வசந்தாவின் அம்மா பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்.வசந்தாவின் இரண்டு அக்காக்களும் தங்களுக்கு எல்லா விதமாகவும் வசந்தாவும் அவரது கணவரும் உதவியாக இருப்பதை சொல்லி ஆனந்தமடைந்தார்கள்.'எங்க வாழ்க்க தான் குடிகார மனுசங்கள கட்டிக்கிட்டு அந்தரத்துல தொங்கிட்டு கெடக்கு.. அவளாது நல்லா இருக்கட்டும்'என பெருமூச்சுவிட்டாள் சின்ன அக்கா. நாங்களும் மாமா சொல்றத அப்படியே கேட்காம வசந்தா மாதிரி கல்யாண விஷயத்துல கொஞ்சம் யோசிச்சு பிடிவாதமா இருந்திருந்தா எங்களோட விருப்பத்துக்கே கல்யாணமும் நடந்திருக்கும். நாங்களும் நல்லா இருந்திருப்போம்னு' கண்ணீர் வழிய பேசினாள் வசந்தாவின் பெரிய அக்கா.யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் வந்துவிட்ட முத்துவை கண்டதும் எல்லோரும் அமைதியாகினர். எல்லோரையும் 'வாங்க' என்று அழைத்துவிட்டு நேராய் கை கால் அளம்ப குளியலறை சென்ற முத்து, முகத்தை எவ்வளவு கழுவியும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது...

Good story
பதிலளிநீக்கு