வரன்களின் முரண்கள் அலைபேசியை தலைமாட்டிற்கு அருகிலேயே வைத்தவாறு தன் வாழ்வின் மிக முக்கியமான அழைப்புக்காக காத்திருந்தாள் வசந்தா. கடந்த அரைமணி நேரமாக அவளுக்கு வந்த அனைத்து அழைப்புகளையும் அறவே தவிர்த்துவிட்டு தான் ஆவலோடு விரும்பும் அழைப்பை ஆசையோடு எதிர்பார்த்திருந்தாள். தான் சமீபமாய் ரவி என்பவரை காதலித்து வருவதையும் அவரை தனது மாமா முத்துவின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் முத்துவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வசந்தா அலைபேசியிருந்தாள்.அவரோ 'நான் வெளியில் இருக்கிறேன், வீட்டுக்கு போய் அழைக்கிறேன்' என்று கூறி வைத்துவிட்டார். தனது மாமாவின் அழைப்புக்காகத்தான் என்ன சொல்லப் போறாரோ என்ற பதட்டம் கலந்த ஆர்வத்தோடு படுத்திருந்தாள் வசந்தா. வசந்தாவுக்கு மூன்று வயது இருக்கும் போதே அவளுடைய அப்பா இறந்து விட்டதால் வசந்தாவும் அவளது அக்காக்கள் இருவரும் அண்ணனும் பக்கத்து ஊரில் உள்ள தாய்மாமனான முத்து வீட்டில்தான் படித்து முடிக்கிற காலம் வரை இருந்தார்கள்.மாமாவின் மேல் வசந்தாவிற்கு கொள்ளை பாசம்.அவருக்கும் வசந்தா மேல்தான் மற்றவர்களைவிட கூடுதல் அன்பு.வசந்தாவின் அக்காக்களை...